Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘எமது வார்த்தை’ Category

காத்தான்குடி யாஹூ குழுமம் அகவை இரண்டில் கால் பதித்து இருக்கும் நேரத்தில்
எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கடல் கடந்து வாழும் அனைத்து உறவுகளையும்
ஊருடன் இணைத்து வைத்ததில் அதன் பங்களிப்பு மிகக் காத்திரமானது.
புதுப் பொலிவுடன் தொடங்கப்பட்டிருக்கும் kattankudi.info மேலும் வளரவும் எமது பிராத்தனைகள்.

இந்த இடத்தில் சில விடயங்களைக் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்.
காத்தான்குடி யாஹு குழுமம் தனக்கென சில மனப்பதிவுகளைக் கொண்டிருக்கின்றது.
அவற்றை பொது நிலைப்படுத்திப் பொருத்திப் பார்க்கிறது.
சில வேளை இணைய முயற்சிகள் குறைவாகவே நடை பெற்றுக் கொண்டிருப்பதால் அவை மேலெழும்பியவையாக இருக்கலாம்.
முதலில்,அகவை இரண்டு என்று தலைப்பிட்டு காத்தான்குடி யாஹு குழுமம் சார்பாக எழுதப்பட்டிருந்த
மடலில் தமது இணைய லோகோவைக் கூட வெட்கமில்லாமல் சிலர் பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு கேள்வியைத் தான் இங்கு முன் நிறுத்த விரும்புகின்றோம்.

காத்தான் குடி வரவேற்பு முகப்பு சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியுடன் அமைக்கப்பட்டது.
அதற்காக அவர் உரிமை கோரி அந்த நிலத்தைச் சொந்தம் கொண்டாட முடியுமா என்ன?
காத்தான் குடி யாஹு குழுமத்தை நாம் அறிந்த வரையில் தெரிந்த வரையில் பழகிய வகையில் பல்கலைக்கழகம் சென்று
paper qualification உள்ள சிலரும் இணைந்து தான் நடத்துகிறார்கள்.
பின் ஏன் இப்படி முட்டாள்தனமாக பதிவுகளை இடுகிறார்கள் என்று தெரியவில்லை.

காத்தான் குடி என்றாலே இப்போது அடையாள சின்னமாக நினைவுக்கு வருவது வரவேற்பு பதாதைதான்.
இதைத் தான் அவர்கள் லோகோ என்றால் உங்களிடம் இருக்கும் இன்ஜினியர்மாறிடமாவது கொஞ்சம் கேக்கக் கூடாதா…?
ஊரின் பொதுவாக் இருக்கும் லோகோவைத் தூக்கி தளத்தில் வைத்து விட்டு அதைப் பயன்படுத்தாதீர்கள் என்று ஒப்பாரி வைத்தால் ….?

வடிவமைத்த இன்ஜினியர் சொன்னால் கூட கொஞ்சம் யோசிக்கலாம்.

இன்றைய இணைய வளர்ச்சி என்பது எங்கொ இருக்கிறது.
அவற்றை இன்னும் சரியாக நாம் பயன்படுத்தவே தொடங்கவில்லை.
இணையத்தில் எமது இயக்கம் என்பது .000000000000000000001 என்ற கணக்கினை விடக் குறைவானது.
ஒரு தளத்தில் சமூகத் தேவை என்பது பன்முகத்தன்மையானது. ஒரு தனி நபரின் செயற்பாடுகளோ அல்லது குழுவின் இயக்கமோ மொத்த சமூகத்தின் தேவையையும் பூர்த்தி செய்வதாகாது.
அதே தளத்தில் பல நோக்கங்களுக்காக பலர் இயங்குவது என்பது யதார்த்தமானது.
தாம் இயங்குவது ஒன்று தான் சமூகத்தின் முழுத் தேவையையும் நிவர்த்திக்கும் என்பது அதிகாரக் கற்பனை.
நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.
எடுத்துக் காட்டாக சகோதரர் ஹிஸ்புல்லாஹ் நினைக்கிறார் தான் மாத்திரம் போதும்
காத்தான் குடி அரசியலை முன் எடுத்துச் செல்லவும் முன் நிறுத்தவும்.
தன் மகளுக்கு ஆண் என்ற நிலையில் தனதன்பு மாத்திரம் போதுமானது என்பது தந்தையின் நினைப்பு.
எட்டு வயதில் இது பொருந்தலாம், ஆனால் பதினெட்டு வயதில்?
இதில் உருவாகும் பிழையான வடிவங்களைத் திருத்தவே நாம் முற்படவேண்டும்.
அதிகாரம் கிடைக்கின்ற போதும் சரி அதனை எடுத்துக் கொள்கின்ற போதும் சரி
மனிதனின் நினைப்பு என்பது இதுவாகவே இருக்கிறது.
ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றுப் பார்வையும் கண்ணோட்டமும் உண்டு.
நீங்கள் நடத்தும் இணையத்தளமான info வைப் பற்றிய எமது பார்வை என்பது ஊரில் நடக்கும் வெள்ளிக் கிழமை ஜும்மாக்களை ஒலி ஏற்றம் செய்வது சரி.
ஏனைய இணையத்தளங்களில் வரும் கட்டுரைகளை நீங்கள் ஏன் மறு பதிவேற்றம் செய்கின்றீர்கள்…….???
-இதற்குள் நீங்கள் எங்களது கட்டுரைகளை பிறர் வெளியிடுகிறார்கள் என்று சொல்வதை ஒரு புறம் வைத்து விடுவோம்-.
தேனி இணையம் அதற்கென்று ஒரு தளம் வைத்திருக்கின்றது.
தினகரன் நாளாந்த பத்திரிகை அதற்கென்று ஒரு தளம் வைத்திருக்கின்றது.
ஏன் வார உரைகல் கூட அதற்கென்று ஒரு தளம் வைத்திருக்கின்றது.
புதிய நாளை கூட அதற்கென்று ஒரு தளம் வைத்திருக்கின்றது.
இதில் வருவதையெல்லாம் தொகுக்கவா நீங்கள் இணையம் நடாத்துகிறீர்கள் ?
எல்லாவற்றுக்கும் ஒரு நியாயம் இருக்கிறது.
ஒரு மாற்றுப் பார்வை இருக்கிறது.
நாம் மாத்திரம் தான் சரி என்பது தான் மிகப் பிழை என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.
பல் வகைமை, பன்மைத்துவம் என்பதன் அர்த்தம் அதன் நோக்கங்களையும் தேவைகளையும் அறிந்து கொள்வதில் அல்லது உணர்ந்து கொள்வதில் அல்ல, அவற்றைப் புரிந்து கொள்வதில் தான் இருக்கின்றது.

Read Full Post »

இஸ்லாம் தொடர்பான நிழற்படங்களைக் காண்பது இணையத்தில் மிகவும் கடினமான ஒன்றாக
இருக்கின்றது.

இந்த வகையில் வோல் பேப்பர்ஸ் மிக முக்கியமானவை.
எமது இலத்திரனியல் உபயோக உலகில் இஸ்லாமியத் தன்மை சார்ந்த
இவற்றின் முக்கியம் கூடிவருகிறது.
அந்த வகையில் இந்தத் தளம் எமது கையடக்கத் தொலைபேசிகளிலும்
கணனிகளிலும் அல்லது எமக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொள்வதில்
இஸ்லாமிய அடையாளங்களைப் பேணுவதில் துணை செய்கிறது.

islam-wallpapers

Read Full Post »

தமிழ் பேசும் சூழலில் கல்விக்கான இணையங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கான இணையம் மிகவும் அரிது. இரண்டு நாட்களுக்கு முன்பாக மின்னஞ்சலில் tamilvu எனும் ஒரு இணையத்தை அன்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.

சின்னஞ் சிறார்களுக்கு கல்வியூட்டல் நடவடிக்கைகளுக்காக என்ற இலக்குடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாம் மூன்றாம் வருடம் வரை கல்வி கற்கும் குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

www.tamilvu.org

Read Full Post »

அஸ்ஸலாம் அலைக்கும்.
தற்போது ஊரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கின்றது என்பதனை அறியத் தருகின்றோம்.
– காத்தான் குடி நெட் –

Read Full Post »

சேர்ர அரசியல்,
கட்சி அரசியல்,
நமது அரசியல்

அரசியல் பற்றிய அறிவு எந்தளவுக்குத் தான் பொது மக்கள் பரப்பிக்குள் ஊடுருவிப் போயிருக்கிறது. கட்சி அரசியல் இஸ்லாமிய அரசியல் கிடையாது என்பதை எப்படித் தெளிவாக சொல்ல வேண்டும் ? என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு வழி இருக்கிறது. ஆனால் அதைக் கைக் கொள்வதில் எமது மெளலவிமார்களுக்கும் தயக்கம், அரசியல்வாதியும் தன் அதிகாரத்தினால் அதைத் தடுத்து நிறுத்தவும் முயல்கிறான்.
அண்மையில் நூறானியாப் பள்ளிவாயலில் பிர்தெளஸ் நளீமி நிகழ்த்திய குத்பா பிரசங்கத்திற்கு எதிராக சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அனுப்பிய கடிதம்.
குறைந்த பட்சம் நாம் அதனை எப்படிப் பார்க்கிறோம் என்றால் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் மொக்கையாக அனுப்பப்பட்டிருந்தமை. சகோதரர் ஹிஸ்புல்லாஹ் தமது அரசியல் பிரச்சாரங்களில் பொய் சொல்கிறார் என்று நாம் சம்மேளனத்திற்கு கடிதம் அனுப்பினால் அது தொடர்பில் எப்படியான நிலைப்பாடுகள் எடுக்கப்பட வேண்டும் ?
குற்றம் சுமத்தும் போது அவற்றிற்கான ஆதாரங்களைத் தான் முதலில் குற்றம் சுமத்தும் தரப்பில் இருந்து கேட்க வேண்டும். இஸ்லாமிய சட்ட மரபும் அதுவாகத் தான் இருக்கிறது.
இஸ்லாமிய சட்டவியல் ஒழுங்கில் உள்ள முக்கியமான ஒரு விதி ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் சுத்தவாளி என்பதாகும்.
நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. முடிந்து போன ஒரு விடயம் குறித்து இனிப் பேசுவதன் பயன் என்ன ?
இலங்கைக்குள் ஒரு முஸ்லிம்கெளுக்கென கொள்கை அரசியலை முன்னெடுக்க எமது ஊரில் மரம் வைத்தவர்கள் நாம். துரதிஷ்டமாக இன்று இலங்கைக்குள் மிக மோசமான இஸ்லாமிய அரசியலை முன்னெடுக்கும் சமூகமாக நாம் இருக்கின்றோம்.

சேர்ர அரசியல்

என்ன தான் சொன்னாலும் ஊருக்கு சேர் இல்லாட்டி எதுவும் நடக்காது என்பது எமது மக்களின் ஐதீகமாக இருக்கிறது. மரபான ஐதீகங்களின் மீதான கேள்வியும் அவற்றை உடைத்து மாற்றங்களின் மீது மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதும் மிகக் கடினமானதாகும்.
சேர் இன்றளவில் செல்வாக்குடன் ஊருக்குள் இருப்பதற்கு துணை செய்கின்ற விடயங்கள் நிறைய இருக்கின்றன.
– தொழில் எடுத்துக் கொடுத்தமை
– ஆதரவாளர்களின் தரத்திற்கு ஏற்ப கொன்றக்ட் கொடுத்தமை
இந்த இரண்டு விடயங்களையும் நாம் மிக முக்கியமாக நாம் பார்க்கிறோம்.
சேருக்கான ஆதரவைத் திரட்டுவதில் இவர்களின் பங்களிப்புக்குக்கள் மிகக் காத்திரமானதாக இருக்கிறது.
இதில் மிகத் தெளிவாகவே தெரிகின்ற விடயம். அவரவர் சுயம் சார்ந்து தமது விருப்புக்கு ஏற்ற ஒரு விடயத்திற்காக அதனைப் பொதுப்படுத்த முனைகிறார்கள்.
தமக்கு கொடுக்கப்பட்ட சலுகைக்கு விசுவாசத்தைக் காட்ட முழு ஊரையும் ஒரு அணியில் திரட்ட முயல்கிறார்கள் என்பது தான் இவர்கள் செய்யும் மடமை.

இதுவரை காலமும் இவ்வழி முறை கைகொடுத்தது. ஆனால் இனி வரும் காலங்களில் அவை எந்தளவு தூரம் நிலைக்கும் உதவும் என்பது கேள்விக் குறி தான்.

கட்சி அரசியல்

இது முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் தோற்றத்தோடு மாத்திரம் நாம் சுருக்கவில்லை, அதனோடு மாத்திரம் சுருக்கிப் பார்ப்பதும் தவறான விடயமுமாகும்.

காலங்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராக ஒருவர் இருப்பார்; வெளித் தெரியும் காரணமாக நாம் இப்படி வேணுமானால் சொல்லலாம் – வியாபாரிகளுக்கு சாதமாக இருப்பது.
இது போன்று வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம் அது காலம் காலமாக அந்தக் குடும்பத்தை தொடர்ந்தும் கட்சி அரசியலில் நிலைப்படுத்தியிருக்கும். இவர்களது ஆதரவு வெளிப்படையானதாகவும் இருக்கும் ஊரளவில் தெரிந்ததாகவும் இருக்கும்.
இதில் மிகவும் வலுவானதாக நாம் சொல்வது தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசியல்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்குப் பின் காங்கிரஸின் தலைவராக யார் வந்திருந்தாலும் என்ன தான் முடிவுகளை எடுத்தாலும் தொடர்ந்தும் தாமாகவே சில நியாயங்களைக் கற்பித்துக் கொள்வார்கள்.

இதில் சிந்தனை என்பதற்கே எந்த இடமும் கிடையாது. தமக்கு சிந்திக்கும் திறன் இருக்கின்றது என்பதனை இவர்கள் உண்மையில் மறந்தே போய் இருப்பார்கள்.
இவர்களுக்கு நாம் தான் சொல்ல வேண்டும் ; உங்களுக்கும் மூளை இருக்கிறது நீங்களும் சுயமாக சிந்திக்கலாம் ; முடிவு எடுக்கலாம்.

கொள்கைவாத அரசியல்

இலங்கைக்குள் இது எந்தளவு தூரம் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பது பெரும் கேள்வி. நாம் இதனுடாக எதனைச் சொல்கிறோம் என்பதற்கு நபி ஸல் அவர்களின் ஒரு ஹதீஸை முன்வைக்கின்றோம். ரஸூலுல்லாஹ் ஸல் அவர்கள் சொன்னார்கள் : உங்களில் மூன்று பேர் இருந்தால் அதில் ஒருவரைத் தலைவராக்கிக் கொள்ளுங்கள்.
நாம் உலகளாவிய முஸ்லிம் சமூகம் (உம்மத் ).
இவ்வுலகில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார். உலகில் 150 மில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இலங்கையில் 02 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறோம். எங்களுக்கெல்லாம் யார் தலைவர் ?.
மிக வினயமாக நாம் சிந்திக்க வேண்டிய கால கட்டம். தியாகங்கள் இன்றி எமது வரலாறு வெற்றியானதாக அமைய மாட்டாது. நான், எனது மனைவி, எனது குழந்தைகள் என்ற சிந்தனைக்கு அப்பால் நாம் , எனது சமூகம், எனது ஊர், நான் சர்வதேசிய உம்மத் என்ற சிந்தனையில் வளர வேண்டும். அவற்றை வளர்க்க வேண்டும்.
இந்த இடத்தில் நபி ஸல் அவர்களின் எச்சரிக்கையை நாம் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

‘நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
– பாகம் 1, அத்தியாயம் 3, எண் 100 -.

Read Full Post »

கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக பேராசியர் அ.மார்க்ஸ் எழுத் தாளர், ஆய்வாளர், முன்னாள் பௌதீகவியல் பேராசிரியர் -சென்னை மாநிலக் கல்லூரி. மாநில அமைப்பாளர் – மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு.இலங்கையில் இன்றைய சூழலில் நபிகளை
இலங்கை முஸ்லிம்களுக்கும் மாற்றுமத சகோதரர்களுக்கும் அறிமுகமும் புரிந்துணர்வு கொள்ளவும் செய்கின்றன மிகப் பெரும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள் . நேற்றைக்கு முந்திய தினம் காத்தான்குடியில் கலந்துரையாடலில் ஈடுபட்ட பேராசிரியர் நேற்று அட்டாளைச்சேனையில் அதே போன்ற ஒரு நிகழ்விலும் பங்கு கொள்டார்ரகள் .
தமிழ் எழுத்துலக சூழலில் நபியவர்கள் பற்றி பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் அளவுக்கு யாரும் மிக நவீனமாக நபியை முன் நிறுத்தவில்லை .
நபியை நேசிக்க வேண்டும் அவர்கள் மீது ஆயிரமாயிரம் ஸலவாத் சொல்லியும் அல்லது கந்தூரி கொடுத்தாயினும் என்று சொல்கின்ற அலவி மெளலானாக்களோ அல்ல .
நபியை இன்னும் திக்ர் மஜ்லிஸ்களுக்குள்ளும் கந்தூரி நார்சாவாகவும் சுருட்டி வைத்திருப்பவர்கள் இவர்கள் தான் .

நேத்ரா டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நபியவர்களின் ஸீரா நிகழ்ச்சி அலவி மெளலானாவின் தொலை பேசி அழைப்பின் காரணமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டது .
இந்த நிகழ்வானது நபியின் சீராவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிகப் பெரும் அநீதியாகக் கருத வேண்டியது . இந்நிகழ்வில் பங்கு கொண்டவர்களில் நளீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளரான ஏபிஎம். இத்ரீஸ் மாத்திரமே முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நவீன உலகின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் சக்தி சீராவுக்கு மாத்திரமே இருக்கிறது .அதன் மீது நிகழ்த்தப்படுகின்ற மறுவாசிப்பானது அனைத்துக்குமான் தீர்வாக அமைய முடியும் என்பது தான் மாற்றுமத சிந்தனையாளர்கள் இன்று வந்தடைந்திருக்குன்ற நிலையாகும். மிகக் கவலையானது சாணக்கியம் மிக்க அரசியல் தலைவர் எமது நபிகளார் என்று சொல்லிக் கொள்ளும் நம் சமூகம் அவர் மீதான மறுவாசிப்பை ஏன் தடுத்து நிறுத்துகிறது என்பது தான் புரியவில்லை .

நபியை நேசித்தல் என்பதன் அர்த்தம் அவர்கள் மீது ஸலவாத் சொல்வதனோடு சுருங்கிய ஒரு விசயமல்ல என்பதை அலவி மெளலானா போன்ற அரசியல் அபூ நவாஸ்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள் .
இலங்கையின் ஸாஹிராக் கல்லூரியில் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆற்றிய உரையின் தலைப்பு –
நபிகள்: சமூக அரசியல் ஆளுமை என்பதாகும் .இஸ்லாத்தை ஏற்றிராத மாற்றுமத அறிஞர் ஒருவர் இன்றைய சூழலில் நபிகள் எப்படி பார்க்கப்பட வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கும் மனநிலை, கண்ணோட்டப் புள்ளியை அலவி மெளலானா போன்றவர்கள் எப்போது வந்தடையப் போகிறார்கள்.
இஸ்லாம் கூறும் சமூக மாற்றம் எப்போது தான் வரும் …? இத்தகைய தலைவலிகள் நிறைந்த தலைமைகள் ஆக்கிரமித்திருக்கும் நிலமையில் …?.
நபியை நேசித்தல் என்பதன் அர்த்தம் விசாலித்தது . அல்குர்ஆனை தனது பண்பாடுகளாகக் கொண்டிருந்த நபியவர்களை இன்னும் நாம் மிகச் சரியாக எமது அரசியல் , சமூகத் தளங்களில் பயன்படுத்தத் தொடங்கவில்லை .
இந்தப் பின் போக்குத்தனம் மாறவேண்டும் . பதின் நான்கு நூற்றாண்டுகளாக வாழும் கொள்கைக்கு நடைமுறை பாவனைத் தன்மையைக் கொடுத்தவர்கள் எமது நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் .
என்றோ அழிந்து போன கொள்கைக்காக இன்னும் கார்ல் மார்க்ஸும் லெனினும் கொண்டாடப்படுகிறார்கள்.
உயிர் வாழும் கொள்கையைத் தந்து விட்டுப் போன நபி பற்றி நாம் வெறும் வார்த்தைப் புகழ்கள் மட்டும் துதி பாடிப் பாடி இருப்பதன் அர்த்தமென்ன …?
அல்குர்ஆனையை இன்னும் எமது சூழலுக்கு மிகச் சரியாக வாசிப்புச் செய்யவில்லை , இதில் சீராவை மறுவாசிப்புச் செய்வதற்கு மிக நீண்ட அனுபவமும் பக்குவமும் அதை விட மிக முக்கியம் தன் சுயநலம் தாண்டிய சமூகம் சார்ந்த உணர்வும் தேவைப்படுகின்றது.

Read Full Post »

இன்று மாலை ( 10 ஜனவரி ) 5:30 மணியளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ காத்தான் குடிக்கு விஜயம் செய்தார்.இன்று புதுக் காத்தான் குடி மொஹிதீன் ஜும்மா பள்ளிக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.
புதுக் காத்தான் குடி மொஹிதீன் ஜும்மா பள்ளி வாயல் முழுமையாக உடைக்கப்பட்டு தற்போது அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் தொழுவிக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே.
பத்து நிமிடங்கள் மாத்திரமே இருந்த மகிந்த ராஜபக்‌ஷ மக்கள் முன்னிலையில் தமிழில் உரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பலஸ்தீனில் அமைந்துள்ள பைத்துல் முகத்தஸை ஒத்த அமைப்பில் இந்தப் பள்ளி வாயல் கட்டிட அமைப்பு இருக்கும் என்ற செய்தியை ஏலவே பிரசுரித்திருந்தோம் என்பதனை நினைவூட்டுகின்றோம்.
இங்கு சுவாரஷ்யமான மக்கள் கருத்தொன்றினை உங்களோடு நாம் பகிர்ந்து கொள்கின்றோம்…
மகிந்த ராஜபக்‌ஷ காத்தான் குடிக்கு ஹெலிகொப்டர் மூலமாக வந்ததோ , தமிழில் பேசியதோ இங்கு மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஏற்படுத்தவில்லை . மாற்றமாக இவ்வளவு செலவு செய்து ஊரில் இருந்த இந்த மொஹிதீன் ஜும்மா பள்ளிவாயலை முழுமையாக இடித்துக் கட்டுகிறீர்களே சுபஹுத் தொழுகைக்கு எந்தப் பள்ளியிலும் இரண்டு ஸப்புகளைத் தாண்டியும் ஆட்கள் இல்லையே,
இதில் கீழ்த் தளத்தில் வாகனத் தரிப்பிடம் வைத்தால் என்ன ? மாடிகளாக உயர்த்தினால் என்ன..?.

கோடிகள் செலவு செய்து மாடிகளாகப் பள்ளிகள் கட்டி என்ன பயன் என்ற மர்ஹூம் தாஸீன் நத்வியின் கூற்றுத் தான் நினைவுக்கு வருகிறது.

Read Full Post »

அரசியல்வாதிகள் அப்படித்தான் தண்ணீர் இல்லாத இடத்தில் பாலம் கட்டுவதாகச் சொல்லுவார்கள் –
மாவோ சேதுங்.
நம் காலத்து அரசியல் நிலவரம் இன்று வரை இந்த யதார்த்தக் கூற்றினைப் பொய்ப்படுத்தாமலே இருந்து வருகிறது. நாமும் காலத்துக்குக் காலம் அரசியல் பற்றிய ஒரே கருத்தினையை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம்
அரசியல் ஒரு சாக்கடை.
தேர்தலுக்கும் அரசியலுக்கும் இடையிலான நுண்ணிய வேறுபாட்டினை அறிந்து கொள்வதில் நாம் விட்ட தவறே இன்று அரசியல் கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றது.
இதனால் தான் அரசியலில் பங்கு கொள்கின்ற அனைத்துத் தரப்பினர் மீதும் ஒரே பார்வையை நாம் கொண்டுள்ளோம்.
இது முதல் நிலை.
இந்த நிலையின் மீது கட்டமைப்புச் செய்கின்ற அடுத்த நிலை தான் ஒரே வகையான கோணத்தில் அமைந்த விமர்சன நோக்கு.
எள்ளி நகையாடுகின்ற ,கேளிக்கையான ஒரு தன்மையைத் தான் கொண்டிருக்கின்றது.
எல்லாவற்றையும் ஒரே நிலையில் விமர்சிப்பது.
இன்னும் இருபது நாட்கள் மாத்திரமே ஜனாதிபதித் தேர்தலுக்கு மீதமுள்ளன.
ஒரே அணியில் நின்று போராடியவர்களே இன்று நேருக்கு நேர் மோதல்.
மிக இலகுவான முறையில் கணிப்பீடு செய்ய முடியுமான ஒரு விடயம்.
* சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் இருக்கின்ற இருந்து வருகின்ற மிகப் பிரதான இரு அரசியல் கட்சிகளில் ஒன்று தான் ஐக்கிய தேசியக் கட்சி.
அரை நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டிருக்கும் ஒரு கட்சியில் இருந்து எந்த அரசியல் தலைவனும் உருவாகவில்லையா…..?
ஐக்கிய தேசியக் கட்சியின் இலட்சியம் தான் என்ன…?
அரசியலை ஒரு ஜீவனோபாயத்திக்கான பொழப்பாகவா அது கொண்டிருக்கின்றது….?

* முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பதவியில் இருந்து விலகிய போது அந்த இடத்திற்கு எல்லோரும் கை காட்டும் ஒரே ஆளுமையாக இருந்தது மகிந்த தான்.
இது அரசியல் சாணக்கியம்.
மிகக் கவனமாக தனக்கான இடத்தை தானே உருவாக்குதலும் அதனை நிர்ப்பந்தமாக மாற்றி விடுதலும்.
* மிக அதிகமாக சொல்லப்படும் குற்றச் சாட்டு
மகிந்தவின் குடும்ப அரசியலும் பணப் புழக்கமும் தான்.
மிகக் கிட்டிய தகவலின் படி 250 ஆக இருந்த மகிந்தவின் குடும்ப் அங்கத்தவர்களின் எண்ணிக்கை தற்போது 391 ஆக அதிகரித்துள்ளது.

ஆனான போதும் நாம் மகிந்தவை ஆதரிப்பதற்கான நியாயம் அதனை விட வலுவானது என்றே நினைக்கின்றோம்.
உலக அரசியல் வரலாறு என்பது பிரபுத்துவ , மதவாதிக்க, சர்வதிகார , கம்யூனிஷ, இஸ்லாமிய, ஜனநாயக ஆட்சி என அனைத்தையும் கடந்தே வந்திருக்கின்றது.
உலகுக்கான பொது நியாயத் தன்னையை இழந்த போது எதுவுமே வரலாற்றில் நிலைத்ததில்லை
அது இஸ்லாமிய ஆட்சியாக இருந்தபோதும் சரியே..
அவற்றுக்கே உரிய நியாயத் தன்னையின் கூடுதல் அளவுக்கு ஏற்ப இன்றளவும் வரலாற்றில் அவை தொடர்ந்து பேசப்பட்டு மாத்திரம் வருகின்றது.
மனித மூளைகளால் ஒன்றிணைந்து தண்டிக்க முடியாததை வரலாறு நிச்சயம் கொடுக்கும்.
அது வரலாற்றுக்கே உரிய சிறப்பம்சம்.
இன்று நாம் தேடுவது சாணக்கியமிக்க அரசியல் தலைவனைத் தான்.
குறைந்த பட்ச அளவிலேனும் பொதுமக்கள் பரப்பிக்குள் இயங்காத ஒருவரை எப்படி மனம் தலைவனாகக் கொண்டாட முடியும்..?
பிரதேச சபையில் தொடங்கி பிரதமர் வரை போய்க் கொண்டிருக்கும் அரச தலைவர்களே தம் மக்களுக்காகச் செயற்படுவது என்பது மிக மிகச் சொற்பம்.
இந்த லட்சணத்தில் இராணுவத் தலைமைகள் தலைவலிகளாகத் தான் இருக்க முடியும்.
எல்லா அரசியல் கட்சிகளுக்கும் காலத்துக்கு காலம் வருகின்ற தேர்தல் மாத்திரமே கவனத்திற்குரிய விஷயமாகவும் வாழ்வாகவும் இருக்கின்றதே தவிர அவற்றிக்கு இடையிலான காலப்பகுதியில் இந்தக் கட்சிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற கவலை தான்.
இந்த இடத்தில் எழுகின்ற முக்கிய பிரச்சனை குழப்பத்தில் இருக்கின்ற மக்களை மீண்டும் தெளிவாகக் குழப்புவது போல் எழும் விமர்சனங்கள் தான்.
எல்லோருக்கும் எல்லாவற்றுக்கு விமர்சனம் உண்டு என்பதனை மறுப்பதற்கில்லை.
அதுவும் மாற்றீடுகளை விமர்சிக்கின்ற போது மிகக் கவனமாக நாம் விமர்சிக்க வேண்டி இருக்கின்றது.
எதை நோக்கி நாம் வேலை செய்கிறோமோ அதை நோக்கித் தான் அடுத்தவர்களை நாம் அழைக்க வேண்டியிருக்கிறது.
அப்படி சமூகத் தளத்தில் வேலை செய்யாதவர்கள் விமர்சங்களை மாத்திரம் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பது என்பது பெருந்தவறாகும்.
PMGG மீதான அரசியல் விமர்சனங்களும் இப்படித் தான் வலுவிழந்து போகின்றது.

Read Full Post »

அண்மையில் சாருவின் பத்து நூல்களின் வெளியீட்டு விழாவிக்கு வந்திருந்த பிரபஞ்சன் சொன்ன ஒரு கருத்து மிகவும் கவனயீர்ப்பைப் பெற்றது.
“ எந்த தயாரிப்பாளர்களிடமும் போய் நாமாகவே எங்களுக்காக நீங்கள் படம் எடுங்கள் என்று சொல்வதில்லை ; அவர்களாகவே அவர்களுக்காகப் படம் எடுக்கிறார்கள் “.
எவ்வளவு எளிமையான ஒரு உண்மை. அப்பாவி தமிழ் நாட்டு மக்களின் வாழ்வியலைச் சிதைத்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் சாபக் கேட்டை இதை விடச் சுருக்கமாக ஆழமாக எப்படித் தான் சொல்ல முடியும்.
இதே யதார்த்தம் இன்னொன்றுக்கும் மிகப் பொருத்தமாக இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.
எந்த அரசியல்வாதியிடம் போய் மக்கள் எங்களுக்கு இந்த வகையான அபிவிருத்தி தான் வேணும்,
எங்கட நாடும் சிங்கப்பூர் மாதிரி, மத்திய கிழக்கு அதி வேகப் பாதைகள், ஐரோப்பிய நாட்டு பசுமை நிறச் சாலைகள் , நியுயோர்க் கோபுரங்கள் , சீனாவின் அதி நெடும் கடற் பாலம் கொண்டதாக அமைய வேண்டும்
எனச் சண்டைகள் , கோஷங்கள் போட்டதில்லை.
எங்காவாது நாம் இப்படி ஒரு கோஷத்தை கேட்டிருக்கிறோமா…?
போட்டுத் தா
போட்டுத் தா கீழ் பாலம் போட்டுத் தா…
நாட்டு நாட்டு பேரிச்சம் மரம் நாட்டு…

மக்கள் கேட்பது என்ன ? மிக இலகுவானது அவர்கள் வாழ்வு போலவே.
படிப்புக்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ற சம்பளம், சம்பளத்திக்கு ஏற்ற வாழ்க்கைச் செலவு.
சுருக்கமாகச் சொன்னால் வரவுக்கு ஏற்ற செலவு என்ற வாழ்க்கைத் தத்துவம் தான்.

ஒரு சராசரிப் பொது மகன் இதைத் தாண்டிய பெருங் கனவுகளைச் சுமந்தது என்பது மிக அசாதாரணம்.
வெள்ளம் வேலி வரை நின்றால் பரவாயில்லை,
இது வேலி தாண்டி உள்வீட்டு கட்டில் வரை நின்றால் என்ன பண்ணுவது…?
உண்மை என்னவெனில் எலக்‌ஷன் டைம்ல யாரு கூட நின்னு கூடமாட வேல செய்து
சேர்ர ஒபீஸுக்குல்ல படுத்துக் கிடந்து இரவெல்லாம் கண் முழிச்சு பாட்டுப் போட்டு ஏரியாவில
இருந்தாக்களையும் தூங்க விடாமச் செய்து ,கணக்கே இல்லாம கையில இருக்கிற மையை எல்லாம்
தேசிக்காய் போட்டு அழிச்சு ,வெற்றிய வெடி சுட்டுக் கொண்டாடிய பாசமுள்ள தொண்டனுக்கு
தனது நன்றியக் காட்ட ஏதாவது செய்ய வேணாமா…. அதுக்கு ஆள் தகுதிக்கு ஏற்ப அது அது கொடுக்கப்படும்.
இப்படி ஒரு நன்றி நவிலில் வருவது தான் இருக்கிற ரோட்டுக்கு மேல மழ காலத்துல தண்ணி நிக்குதாம்னு அதுக்கு மேலயே கிரவலக் கொண்டு வந்து கொட்டுர.
இதில ஒரு கொமிஷன அடிக்கலாம் இல்ல.
வார எப்படி சுருட்டலாம்னு போர்ர திட்டத்துல ஊரு எப்படி விளங்கும்…?
இனி மழ வந்தா தண்ணி வீட்டுக்குள்ள வராம ரோட்டுலயா ஓடும்…?.
இருபத்தைந்து லட்சம் செலழிச்சு கட்டின வீட்ட
அஞ்சு லட்சத்தில வார கொன்ரட் நாசமாக்கிடும்.
கொஞ்சமாவது யோசிக்க வேணாமா …
எப்பவும் வீட்ட விட ரோடு பனிவா இருந்தாத் தானே தண்ணி ஏறாது.
ரோடு செரில்லன்னா இலேசாகப் பனிக்கலாம்.
அதே மாதிரி ரோட்ட உசத்த உசத்த வீட்ட எப்படிங்க உசத்த முடியும்.
என்ன செய்ய ?
ஊர இப்படி அபிவிருத்தி செய்ரது ஒண்ணு தான் அரசியல்வாதிட இலட்சணம்னு யாரு சொன்னது?
ரொம்பத் தப்புங்க.
நாம சிகரெட் பிடிக்கிற யார்கிட்டயாவது ஏங்க நீங்க சிகரெட் பிடிக்கிறீங்க அப்படின்னு ஒரு கேள்வியக் கேட்டா என்ன பதில் சொல்லுவாங்க….?

ஒரு விஷயத்தை தெரியாம செய்வது என்பது தவறு,
அதே விஷயத்தை தெரிந்தே செய்வது என்பது தப்பு,
அதே தப்ப திரும்ப திரும்ப செய்யும் போது ஸ்டைலாகவும் பேஷனாகவும் மாறி விடுகிறது.

Read Full Post »

ஒருவருடம் முடிவடையும் போது அந்த வருடத்தின்
கணக்கைப் பார்ப்பது என்பது மரபு.
ஒரு வியாபாரி தன் இலாப நட்டக் கணக்கைப் பார்ப்பது போல.
இஸ்லாம் 1431 வருடத்தை அடைந்திருக்கின்றது.
இந்த பதின் நான்கு நூற்றாண்டில் உலகம் இஸ்லாத்தால் அடைந்தது என்ன ?
என்ற கேள்வியை நாம் எழுப்புவது நியாயமானது அதனை விட மிக முக்கியம்
உலகை ஆளும் ஒரு கொள்கையை சுமந்திருக்கும் நாம் எமது சூழலில்
எப்படி இருக்கிறோம் என்று பரிசீலிக்க வேண்டி இருக்கின்றது.

அதற்கு முன் சற்று ,
” நபி (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து உமர் (ரலி) அவர்கள் காலத்தில் (கி.பி.639) ஆண்டுக்கு அடையாளமாக எந்தப் பெயரைச் சூட்டலாம் ஆண்டின் தொடக்கமாக எதை கருதலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது.

இப்படி ஒரு ஆலோசனை நடைபெறுவதறகான சூழலை ஏற்படுத்திய பெருமை நபித்தோழர் அபூமூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்களுடையதாகும். ஒரு முறை உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதும் போது அரசின் கடிதங்களில் தேதியிடப்படாமை குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்வியின் விளைவாக உடனடியாக இஸ்லாமிய காலண்டர் ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உமர் (ரலி) அவர்கள் உணர்ந்தார்கள்.

அதற்கு முன்னர் ஒரு சமயம், உமர் (ரலி) அவர்களின் முன்னிலையில் ஒரு ஒப்பந்தம் வாசிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் ஷஃபானில் முடிவடைவதாக எழுதப்பட்டிருந்தது.உமர்(ரலி) அவர்கள், ஷஃபான் எனில் கடந்த ஆண்டின் ஷஃபான் மாதமா? அல்லது இந்த ஆண்டினுடையதா? ஏன்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விடை அந்த ஒப்பந்தத்தில் இருக்கவில்லை.

முன்னர் ஒருமுறை எமன் நாட்டிலிருந்து வருகை தந்த ஒருவர், எமன் நாட்டில் தேதியிடும் பழக்கம் இருப்பதாகவும் இன்ன நாள் இன்ன மாதம் இன்ன ஆண்டு என்று அவர்கள் தேதியை குறிப்பிடுவதாகவும் எடுத்துச் சொலலியிருந்தார்.

இத்தகைய சூழ்நிலையில் நபித்தோழர்களுடன் இஸ்லாமிய ஆண்டின் தொடக்கம் பற்றி ஆலோசிப்பதற்கான ஒரு கூட்டத்தை ஹிஜ்ரி 17 ம் ஆண்டில் உமர் (ரலி)அவர்கள் கூட்டினார்கள். அதில் நான்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

1) நபியவர்களின் பிறப்பு
2) நபியவர்களின் இறப்பு
3) நபி(ஸல்) அவர்கள் நபியாக தேர்வு செய்யப்பட்டது
4) நபியவர்கள் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ததது.
இவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாளமாக கொள்ளலாம் என்று தோழர்கள் ஆலோசனை சொன்னார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள் ஹிஜ்ரத்தை தேர்வு செய்தார்கள் “.
( சிந்தனைச் சரம் )

இந்த இடத்தில் நாம் நிறையக் கேள்விகளை எழுப்ப முடியும் .
ஏன் உமர் ரழி அவர்கள் ஹிஜ்ரத்தை மையப்படுத்தி இஸ்லாமிய ஆண்டுக் கணிப்பீடு அமைய வேண்டும்
என்ற முறையை ஏற்படுத்தினார்கள்.
அடுத்த நிகழ்வுகள் எல்லாம் அதனை விட முக்கியத்துவம் கொடுக்கப்படக் கூடியதாக இல்லையா ?
மேலுள்ள நிகழ்வுகள் தவிர இஸ்லாமிய வரலாற்றில் அதி முக்கியத்துவம் கொடுக்கப்படக்கூடிய
நிகழ்வுகள் பல இருக்கத்தானே செய்கின்றன…
நபி ஸல் அவர்களது பிறப்பினை வைத்த
முதலாவது முஸ்லிம் குழுவை நபி அவர்கள் ஹபஸாவின் நஜ்ஜாஸி மன்னனிடம் அனுப்பியது
நபி அவர்கள் தாயிபுக்கு போன சம்பவம்
அல்லது இஸ்லாத்தின் வாழ்வா மரணமா என்றிருந்த உஹத் போர்
அல்லது நபியின் மரணம் .
இருந்தாலும் இஸ்லாத்தின் இரண்டாவது கலீபா உமர் (ரழி) அவர்கள் நபியவர்கள் ஹிஜ்ரத் சென்ற வருடத்தினை
தெரிவு செய்து, இதிலிருந்துதான் இஸ்லாமிய வருடக் கணிப்பீடு கொள்ள வேண்டும்
என்ற முறையையும் ஏற்படுத்தினார்கள்.
இஸ்லாமிய வரலாற்றின் பொன் எழுத்துக்களால் எழுத வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சியை
தன்னகத்தே கொண்டிருப்பவர்கள்.
நபியவர்களது காலத்தில் பல இடங்களில் அவர்களது நுட்பமும் ஆளுமையும்
வெளிப்பட்டிருக்கின்றன.
உமர் ரழி இஸ்லாமிய ஆட்சியாளர்கள் என்று வரும் போது இஸ்லாமிய அரசு என்ற நிலையில் அதனை நிறுவனமயப்படுத்துவதிலும் நிலைப்படுத்துவதிலும் கூடுதல்
கரிசணை காட்டியவர்கள்.
அது இஸ்லாமிய இராணுவ முறையாக இருந்தாலும் சரி
நிர்வாக முறையாக இருந்தாலும் சரி.

உண்மையில் எந்த அடிப்படையில் அவர்கள் இதனைத் தெரிவு செய்திருப்பார்கள்
என்று நோக்கும் போது பதின்மூன்று வருட மக்கா வாழ்வில் நபி அவர்களால் சாதிக்க முடியாமல்
போனதை வெறும் பத்து வருடங்களுக்குள்ளால் மதீனாவில் சாதிதார்கள்.
அதுவும் இஸ்லாத்தை ஒரு கொள்கை என்ற நிலைக்கு அப்பால் என்றுமே வாழும் ஆட்சி செய்யும்
அரசாக நிறுவினார்கள் என்று வெளிப்படையாக நாம் நியாயம் கற்பிக்க முடியும்.

அடுத்த இஸ்லாமிய நிகழ்வுகளில் ஏதாவது ஒன்றினையோ அல்லது மொத்தமாகவோ
நாம் நோக்கினால் அவை ஒன்றில் சந்தோஷமான அல்லது துன்பியல் நிகழ்வினை
நினைவு கூறுவதாகவே அமையும்.
அந்த நாளை அமர்க்களமாக அட்டகாசமாக பெரு நாள் போன்று கொண்டாடியிருக்க வேண்டும்
அல்லது அமைதியாக துக்கம் அனுஷ்டித்திருக்க வேண்டும்.
இவை அனைத்தையும் விட தனித்து நிற்பதும் புரிய முடியாத , செறிவான நிகழ்வாக அமைவதும் ஹிஜ்ரத் மாத்திரமே.
எனவே ஹிஜ்ரத் என்பது வெறுமனே புலப் பெயர்வு அல்ல.
சிந்தனை மாற்றம் என்பதுவே மிக அழுத்தமாகக் கொள்ளப்பட வேண்டும். மிக யதார்த்தமான உண்மையும் ஒருவரது மன நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனில்
அவர் வாழும் சூழலை மாற்றினால் போதுமானது.
பதின் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இதன் மூலம் உமர் ரழி ஓர் ஆழமான சிந்தனையை
நமக்கெல்லாம் சொல்லி விட்டார்கள்.
விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியின் அதி உச்ச நிலைக் காலத்தில் வாழ்கின்றோம் என்று
சொல்லிக் கொள்ளும் நாம் எமது சூழலில் மிக மோசமான நடத்தை சார் பண்புகளைக்
கொண்டிருக்கிறோம் என்பதுவே மிகவும் வேதனைக்குரியது.

இன்னும் எமக்கு பொருளாதார நகருக்கும் குடியிருப்புப் பரப்புக்குமான பொது அறிவே இல்லாத நிலையில் தான் இருக்கிறோம்.உண்மை தான் நாம் பெரிய வியாபார சமூகம் என்று சொல்லிக்
கொள்பவர்கள் தான். அதற்காக நிம்மதியாக வாழ ஒரு அமைதியான சூழல் இருக்கக் கூடாதா என்ன ?

வென் தூனனினதும் வெபரினதும் கைத்தொழில் அமைவிடக் கோட்பாடு என்று புவியியல் பாடத்தில் எதனைச் சொல்லித் தருகிறார்கள்.
குடியிருப்புப் பகுதி என்பது தனித்துவமானது.
அங்கு கனரக வாகனங்களுக்கு என்ன வேலை.
ஓட்டமாவடியில் ஒரு அமீர் அலி எந்த அறிவுமில்லாமல் வாகை மரத்தினை வெட்டி
தனது பூர்வீக அறிவினை அம்பலப்படுத்தினார்.
இப்போது நம்து ஊரில் இன்னொன்று.
நிறையச் செய்ய வேண்டும் என்பது சமூகம் வேண்டி நிற்கும் ஒன்றுதான்.
ஆனால் அது நிறைவாகச் செய்யப்பட வேண்டியது என்பது தான் யதார்த்தம்.
சமூகம்சார்ந்த சிந்தனை என்பது வரலாற்றோடு தொடர்பானது.
நாளைய வரலாற்றில் எம் இளைய சமூகத்தின் முன் நாம் கைகட்டி வெட்கித் தலை குனிந்து
நிற்க வேண்டி வரும்.
அதனை விட முக்கியமாக நாம் விட்ட வரலாற்றுத் தவறுகளின் முன் எதுவுமே பேசத் திராணியற்றவர்களாய் தீராத வலியுடன் அவமானத்தோடு நிற்கும் போது அவை ஏளனமாய்ப் பரிகசிக்கும்.

Read Full Post »

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.

அன்பின் காத்தான்குடிநெட் வாசகர்களுக்கு இஸ்லாமியப் புது வருட வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்புதிய வருடத்தில் இஸ்லாத்தின் எதிர்பார்ப்புக்களையும் எமக்கான தெரிவுகளையும்
அடைவோம் எனும் திடத்துடன் புதிய வருடத்தினை எதிர் கொள்வோம்.
அல்லாஹ் எம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக .

Read Full Post »

யாரு அது சும்மா கிடந்து தொனதொனன்னு
முணுமுணுத்துக் கொண்டு இருக்கிர,
சேர் மேம்பாலத்தை உடைச்சுப் போட்டாரு என்று.
நம்முட சேர் செய்தா அதில விஷயம் இல்லாமலா இருக்கும்.
எப்படியான டைம்லயலாம் சேர் எவ்வளவு விளையாட்டு காட்டியிருக்காரு.
இதெல்லாம் ஒரு விஷயமா தூக்கிப் பிடிக்கிறதுக்கு.
ஊர்ல முன் மாதிரியா ஒரு விஷயம் தான் இருக்கணும்.
நம்முளப் பார்த்துதான் அடுத்தவன் செய்யனும்.
ஏறாவூர்லயும் மேம்பாலம் இருக்கு.

அதே மாதிரி நம்முட ஊர்ல இருந்தா நமக்கு அவமானம் இல்ல.
அதான் உடைச்சிப் போட்டு கீழ் பாலம் போடலாம் என்று சேர் இருக்காரு.
பாருங்களேன் நம்மட சேர யார்தான் மதிக்கிராங்க.
செய்து முடிஞ்சதுக்கப்புறமா வந்து அவரு செஞ்சா செரிதான் என்று
எல்லோரும் ஒத்துப் பாடுவாங்க.
அது தல ஸ்டைல்.

ஒன்னா இரெண்டா தாம் தூம்னு நின்னு குதிக்கிறதுக்கு.
சீசனுக்கு சீசன் மனுஷனுக்கு ஏதாவது புதுசு புதுசா நோய் வருதோ
இல்லையோ
சேர்ர பேரு மட்டும் ஊருக்குள்ள வந்து மக்கள ஒரு வழி பண்ணிட்டுத்தான் இருக்கு.
நீங்க யாரும் ஒன்னுக்கும் பயப்படப் போடாது.
எப்போதும் போல தைரியமா இருக்குனும்.
சேர்ர மீசையில மண் ஒட்டவே ஒட்டாது.
ஏன்னா அவமானம் எல்லாம் எப்போதும் போல மண்ணுக்குத் தான்.
என்னா சேர் சொல்றீங்க நீங்க எல்லாம் ,
இதெல்லாம் சேர்ர அரசியல் வாழ்க்கையில் சகஜமப்பா.
பிறகு என்ன புதுசா ?
சேர் எத்தனையோ சவால்களை எல்லாம் பார்த்திருக்காரு.
உங்களால ஒன்னும் புடுங்க முடியாது.
எப்படி எல்லாம் வந்திச்சு .
சேர்ர அரசியல் வாழ்க்கையை
முடியுது என்றெல்லாம் சொன்னீங்க.
ஏதாவது நடந்திச்சா…
நடந்திச்சா..
நடந்திச்சா.
ஏன் கடைசியா நடந்தது வரை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.
செலிங்கோ புரபிட் செயாரிங் கேஸ்ல என்ன சொன்னீங்க.
பக்கம் பக்கமா எழுதினாங்க,
தமிழ் மொழி பெயர்த்து எல்லாம் போட்டாங்க.
என்ன நடந்தது..
இப்ப என்ன நடந்த்துட்டு இருக்கு.
விடுங்க சார்.
பரவாயில்ல படிச்சதுக்கு ஏதாவது
பண்ணவும் எழுதவும் எங்களுக்குத் தெரியும் என்று காட்ட நீங்க
எல்லாம் ஏதாவது பண்னத்தானே வேணும் .
it is ok.
செரில்லவா நாளைக்கு ஊர் வரலாறு என்று
ஏதாவது வரும் போது நீங்க எல்லாம்
ஒன்னும் பண்ணல்ல என்ற குறை வரப்போடாதில்ல.
அடுத்தது நீங்க எல்லாம் சேர்ந்தும் என்னை உங்களால உன்னும் பண்ண முடியல்ல
என்பதையும் மூன்றாவது தலை முறையும் அறியத்தானே
வேண்டும்.
விமர்சனத்தைத தானே முதலில் வரலாற்று மாணவன் தேடுவான்.
அதன் மூலம் தானே ஒரு சமூகத்தில் ஒருவனின் ஆதிக்கத்தை
அறிய முடியும்.


நான் யாரு…?
i am a creater.
எப்போதும் பிரச்சனைகளையை உருவாக்குவன் வாக்கு வங்கிகளுக்காக.
நீங்க எல்லாம் யாரு …..?
you are moderates
என்னப் பத்தி என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் வருது
எங்க வருது, யாரு அத வெளியில கொண்டுவாராங்க,
என்ன என்ன எதிர்ப்புக்கள் எல்லாம் அதுக்கு வருது என்கிற ஒழுங்காக
உட்கார்ந்து update பண்றாக்கள்.
ஒபீஸ்ல உட்கார்ந்து பிரீ நெட்ல ஓசி பீசியில
என்னையப் பத்தி கொஞ்சம் கேவலமா உங்களுக்குப் பாதிப்பு
( வீட்டுக்கு நைட்ல கல்லெறி வந்து விழாத/) வராத அளவுக்கு
எழுதுவீங்க.
இன்னும் ஓரளவு வசதியிருந்தா
சொந்தமா ஒரு லப்டப் வாங்கி என்னையப் பத்தி
அப்படியில்லையா தாருல் அதர் பத்தி எழுதுவீங்க.
அன்றாடம் வாய்ப் பசிக்காக தினப் பேப்பர் பார்க்கிற
கூட்டம் தானே நீங்க.

இவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு.

அதனால தான் சொல்றன் நீங்க பயப்படாம என்னப் பத்தி எழுதலாம்.
ஏன் பூவிய அடிச்சேன்னு கேக்கீறீங்களா .
உங்கட நெட்ட விட பயங்கரமானது வார உரைகல்.
சில கிறுக்குப் பயலுகளுக்கு டொய்லட் போகணும்னா
காலங்கார்த்தால
அங்கேயே உட்கார்ந்து பிரிஸ்டல் ஒன்னு அடிப்பானுக.
அந்த மாதிரி வெள்ளிக் கிழமையான்னாப் போதும்
காலையிலேயே ஓடிப் போய் அந்தப் பேப்பரப் பார்க்கிறது.
ஊருக்குள்ளேயே பெரிய யாவாரம்னாப் பார்த்துக்குங்களேன்.
அட நீங்க நெனக்கிறீங்க இவங்க எல்லாம் கிடக்கிறதே ஊருக்குள்ளதான் என்று ,உண்மைதான்
ஆனா ஒருத்தருக்கும் தெரியா ஊருக்குள்ள என்ன நடக்குதுன்னு.
எவனுக்கு என்ன அக்கறை.
எது நடந்தா என்ன ?
எது நடக்கலைன்னா என்ன ?
யாவாரம் மட்டும் நடந்தாச் சரி.
இது தான் நெலம.
இதுல வாரத்திக்கு ஒரு தரம் என்னப் பத்தி எக்கச் சக்கமா
எழுதிறது.
வாரத்திக்கு ஒன்னு.
மாசத்திக்கு நாலு.
இப்படியே போய் நூறாவது வாரம் வந்தாச்சி.
அதில வேற ஒரு பூர்வீக வரலாற்றாய்வாளர் ஒருவரக் கொண்டு வந்து
என்னயப் பயம் வேற காட்டினது வேற விஷயம்.

அடித் தட்டு மக்கள் மனசில விஷம் சும்மாவே ஊறுமில்ல.
பின்ன என் நெலம் என்னாகும்.
எண்டல்லாஹ்வே , நெனச்சுப் பார்க்கவே முடியல்ல.


அதான் தட்டியாச்சு.
உங்கள ஒன்னும் பண்ண மாட்டேன்.
நீங்க எழுதுங்க.
ஏன்னா பொது மக்களின் அடித் தட்டு வரைக்கும்
இந்த எழுதுக்கள் போகப் போறதில்ல.
அநியாயத்துக்கு இந்த PMGG எல்லாம் இழுத்து எழுதுறீங்க .
அவங்க வயித்துல நெருப்பக் கட்டிகிட்டு ஊருக்குள்ள என்னைய எதிர்த்து வாழ்றத விடுங்க.
கவர்மெண்ட் தொழிலையும் செய்துட்டு
குடும்பத்தின்ர வேல வெட்டிகளையும் பார்த்துக் கொண்டு
வாழ்றது எங்கிரது எவ்வளவு பெரிய விஷயம்.
உங்களால முடிஞ்சிச்சா இல்லையே.
ஊர விட்டு ஓடிப் போய் மால்களிலும் ஷொப்பிங் செண்டர்களிலும்
ரொலி தள்ளிக் கொண்டு கூலிங் கிளாஸ தலைக்கு மேல வைச்சுக்
கொண்டு நடக்கிறதுலயும் சுய இன்பம் காண்றவங்க நீங்க.
நானே எவ்வளவு சின்ன மனுஷன் அவங்கள மதிக்கிறன்.
நீங்க எல்லாம் என்னப்பா இவ்வளவு பெரியாக்களா இருந்துட்டு
இப்படி எல்லாம் நடந்துக்கிரீங்க.
பரவாயில்ல பிரச்சனைகளை எல்லாம் பேசிப்
பேசியே வெளி நாட்டுல காலங் கடத்தி விடுவீங்க.
பெரிய விஷயம் தான்.
ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்குங்க.
கண்ணாடி ரூமுக்குல்ல இருந்துட்டு பேசுறது எங்கிறது வேற.
களத்தில் என் முன்னாடி நிக்கிறது எங்கிறது வேற.
எந்த யுனிவேர்சிடியிலையும் அந்தப் படிப்பச் சொல்லித் தரமாட்டானுகள்.
ஆனானப்பட்ட தலைவர் அஷ்ரபே என்னய காங்கிரஸில் இருந்து
வெளியில தூக்கிப் போட்டாரு.
எந்த வாயிலால நான் அரசியலுக்கு வந்தேனோ அதுவே
என்னை துரத்தி மூடிப் போட்டுது.
அதற்காக நான் என்ன துடித்தா போய் விட்டேன்.
நீங்க எனக்கு அதெல்லாத்தையும் மறந்து ஓட்டுப் போடல்ல.
நான் அரசியல்ல நெனச்சத சாதிக்கல்ல.
இருந்தாலும் ஒரு விஷயம் சொல்றன்.
நான் கெட்டவன் என்கிறதுக்காக இதக் கேக்காமப் போய்விடாதீங்க.
கெட்டவனுக்கும் நல்ல விஷயங்கள்
தெரியும் நல்லவனுக்கு கெட்ட விஷயங்கள் தெரிஞ்சிருக்கிறது போலத்தான்.

ஒரே ஒரு வழி.
சமூக அரசியல்.
எமது காத்தான் குடி சமூகத்தை எப்போதும் ஆதிக்கம் செலுத்திற
என்னோடு சேர்த்து சம்மேளனம் தான்.
இதில முக்கிய பங்கு ஜம்மியதுல் உலமாவுக்கு இருக்குறது.
இஸ்லாத்தை வெறுமனே பள்ளியில
வெள்ளிக்கிழம மெளலவிய ஜும்ஆ செய்றதுக்கு நியமிக்கிறதுக்கு மட்டுமே யூஸ் பண்ணிட்டு இருக்கிறீங்க.
அதயே கொஞ்சம் சமூக அரசியலில் பயன்படுத்தியிருந்திங்கன்னா என்ன மாதிரி
ஒருத்தனால நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கப் போறதில்லை.
எந்தளவுக்கு எனில் ஒரு முறை ரஊப் மெளலவி சென்ரல் ரோட்ல நடந்த
ஒரு கூட்டத்தில வந்து ( அவடத்த அவரு வந்தது அது தான் கடைசித் தரம் என்பது வேற விஷயம் )
குர்ஆன்ல ஹிஸ்புல்லாஹ் என்ற சொல்லே இல்ல என்று கத விட்டாரு.
எங்க வாப்பா ஒரு ஆலிம் ,எனக்குத் தெரியும் ஒரு கத்ஸமிஅ ஸூராவுல கடைசி வசனத்தில
வருது ஹிஸ்புல்லாஹ் என்ற சொல்.
ஒரு மெளலவியாவது அவடத்த எழும்பிச் சொல்லலாட்டியும் பரவாயில்ல,
அடுத்த கிழம குத்பாவிலயாவது சொல்லியிருக்கலாம் இல்ல.
அப்பவே நெனச்சன் இவங்க எல்லாம் தேறமாட்டாங்க என்று.
உடனேயே நீங்க நினைக்கப் போடாது..
நீங்களாகவே ஒரு தீர்மானம் போட்டு இவருதான் இந்த முறைத் தேர்தலில் நிக்கனும்
என்று நீங்க அறிவிக்க வேணும் என்று சொல்ல இல்ல.
சூசகமாக வேணும் ஊர் மைக் உங்க கையில் இருக்கில்ல.
பொதுவாகத் தெரியும் ஒரு தீமையை தடுக்க முடியுமா இல்லயா.
முதல்ல அரசியல் ஒரு சமூகத்திக்கு மூச்சு மாதிரி முக்கியம் எங்கிறத மக்களுக்குச்
சொல்லிக் கொடுங்கப்பா.
இஸ்லாமிய அரசியல் ஒழுங்கு என்ன ?
எங்கிறது உங்கட மத்ரஸா செலபஸ் சேர்த்துக்குங்க.
வரலாற்றுத் தவறுகள் அடிக்கடி நடக்கக் கூடாது.
கடைசியா நீங்க கேக்கிறது விளங்குது எனக்கு.
இதெல்லாம் எப்ப முடியும்னு தானே.
நீங்க எல்லோரும் மெளத்த நம்புறீங்க தானே,
ஆனா அது எப்ப வரும்னு உங்கள்ல எவ்வளவு தான் படித்த
அறிவாளி இருந்தாலும் சொல்ல முடியுமா….?!

Read Full Post »

மனசத் திறந்து இந்தக் கேள்விகளுக்கு நீங்க உங்களுக்கே பதில் சொல்லுங்க…
முஹாஸபா என்பது ஒரு முஸ்லிமுக்கு மிக மிக அவசியம் அல்லவா..
ஏனா இஸ்லாம் எல்லாத்தையும் கணக்குப் பார்க்கும்.
கேள்வி கேட்கும்.
* எங்கிருந்து நீங்கள் தோற்றம் பெற்றீர்கள் ???
பலாஹிலிருந்து வெளியேற்றப்பட்டது ஏன்…
என்ன காரணம் சொல்லிக் குழப்பத்தை ஆரம்பித்தது….?
செலபஸ் பழசாகிப் போய்விட்டது….
புதிய கல்விக் கலாசாரத்தை நாம் தொடங்க வேண்டும் என்பது தான்.
நடந்தது என்ன ….?
ஊர்,உலகம் அறியும்.
முதலாவது மிகப் பலமாகவும் உரத்தும் சொல்லிருக்க வேண்டியது என்ன…?
இலங்கையில் இருக்கின்ற அனைத்து மத்ரஸாக்களும் அங்கீகரிக்கத் தக்க
ஒரு பாட முறைமையை எழுதி இருக்க வேண்டும், குறைந்த பட்சம் அதற்காக ஒரு விரிவான செயலமர்வையைனும் செய்து இருக்க வேண்டும்.
இனிமேல் பிறந்து வளர்ந்து மெளலவியாகப் போற குழந்தையும் துஆ செய்திருக்கும்.
மாற்றுக் கல்வி பற்றி நாம் தான் முதன் முதலாக பேசுகிறோம் என்று வழமையான உங்கள் பாணியில் நீங்கள் புழுகியிருந்தாலும் பரவாயில்ல உருப்படியாக ஏதாவது நடந்தால் சரிதான் என்ற அளவில் எல்லோரும் அங்கீகரித்திருப்பார்கள்.
இது என்னடான்னா கல்யாணம் காட்சின்னு போனாலும் தான் மையித்து வீட்டுக்குப் போனாலும்
தான் எல்லார்ர வாயிலலையும் இஸ்லாத்தைப் பற்றிய பேச்சுத்தான்.
நல்ல விஷயம்தானே இதுக்கு ஏன் இப்படிக் கொதிக்கிறீங்க என்று யாருமே கேட்கல்ல,
ஏன்னா என்ன பேச்சு :
அது ஆட்டத்தான் வேணுமாம்,
ஹதீஸ் வந்திருக்காமே ,அத அறிவிச்ச அறிவிப்பாளர் முர்ஜியாக் கொள்கையுடையவராக
இருந்தாலும் முர்ஜியாக் கொள்கையுடையவர்கள் அறிவிக்கும் பல ஹதீஸ்கள் புஹாரியில் இடம் பெற்று
இருக்குதாமே , அப்ப அதெல்லாம் என்ன பலஹீனமான ஹதீஸ்களா என்ன ?
அதனாலதான் பலஹீனாமான ஹதீஸ் இல்லைன்னும் சொல்றாங்க.
அடுத்தவரு :பெரிசா வந்திட்டாங்க இஸ்லாத்தச் சொல்றதுக்கு ,ஏங்க இவ்வளவு காலமா இமாம்களுக்குத்
தெரியாதது எல்லாம் இப்ப வந்தவங்களுக்குத் தெரிஞ்சுட்டாமோ….
அதுக்குள்ள அங்க வேற அமைப்பை சார்ந்த யாராவது இருந்தா போதும்,
என்ன உங்கட கடையில எப்படி விக்காங்க என்ற தோரணையில ஒருத்தர் பார்ப்பாரு,
உடனே மத்த எல்லோரும் இப்ப பாருங்க அவரு எப்படி மழுப்புவாரு என்று பார்க்க ஆரம்பிப்பாங்க.
இனி அவரு கொஞ்சம் விபரமான அமைப்போடு தொடர்புள்ள ஒருத்தரா இருந்தா அதுவும் சரி,
இதுவும் சரி என்பாரு.
ஏன்னா ஆட்ட இல்லைன்னா என்னங்க தொழுகை முறிஞ்சா போகும் என்று ஒரு போடு போடுவாரு.

கொஞ்ச நாளா அது என்னத்தக் கேக்குறீங்க ஊரெல்லாம் இதான் கத.

பெரிய சத்தமா இருக்கும் ஆக்ரோசமா பேசிட்டு இருப்பாங்க பார்த்தா ஒன்னும் இல்ல,
கூடினதுக்கு எதையாவது பேசணுமே என்றதுக்கு இது.

மாற்றுக் கல்வி குறித்து எவ்வளவு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
அது பொதுக் கல்வியாக இருந்தாலும் சரி, மத்ரஸாக் கல்வியாக இருந்தாலும் சரி.
மிக நீண்ட காலமாகவே இரண்டிலும் மாற்றம் வர வேண்டும் என்ற கருத்து தொடர்ந்த்தேர்ச்சியாகப்
பேசப்பட்டுக் கொண்டே வருகிறது.
ஆனால் மாற்றம் தான் வந்தபாடில்லை.
எனினும் மத்ரஸாக் கல்வியில் இலங்கையின் அனைத்து மத்ரஸாக்களையும் ஒன்றினைத்த
வகையில் பொதுவான ஒரு பாடத்திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு எட்டப்பட்டு
இப்போது அதற்கான பாடத்திட்ட வரைவுகளும் நிறைவு பெற்றிருப்பதானது மனமகிழ்வைத் தருகிறது.
கேள்வி என்ன காலாகாலமாக பாரிய தொழிற்சாலைகளில் உற்பத்தியாகிற பொருட்கள் மாதிரி
மத்ரஸாக்களில் இருந்து மெளலவிமார்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறார்கள் அதனால் சமூகம்
அடைந்ததும் அவர்கள் அடைந்ததும் என்ன ?

எது முரண்பாடு என்று நாம் அடையாளப்படுத்தினோமோ அதையல்லவா…
முதலில் நாம் செய்ய வேண்டும் ,அதை விட்டு விட்டு என்னமோ விரல் ஆட்டத்தான் புதுப் பள்ளி கட்டின மாதிரி நடந்தா என்ன அர்த்தம் ?
ஒரு விழிப்புணர்வை மத்ரஸா மாணவர்களிடம் நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்களா…?
அதற்காக குறைந்த பட்ச அளவில் உங்களால் முடிந்த அளவில் எதனையாவது நல்ல ஒரு விஷயத்தை
முன்னெடுத்திருக்கிறீர்களா ….?
விரலாட்டுவதால் மட்டும் கல்விச் சிந்தனைகள் சும்மா பீறிட்டு வந்திருமோ….
ஏன் ஆண்டாண்டு காலமாக நீங்கள் கற்றதையை நாங்களும் தலைமுறை தலைமுறையாகக் கற்று
வருவதற்கு விவசாய நிலமா…? என்று எழுப்பிய கேள்வி நியாயமானது.
வீட்ல யாரு துடிப்பா இருக்கிற பிள்ளையோ அதனைப் பிடித்து மத்ரஸாவுக்கு அனுப்புவது.
இதில எப்படி நல்ல சமூக மாற்றத்திக்கான அடித் தளம் இடப்பட முடியும்.
இதையெல்லாம் பேசாமல் காலா காலமாக இமாம்களால் தங்களது அறிவு முதிர்ச்சியின் விளைவாக
அவர்களது சக்திக்கு உற்பட்ட நிலையில் அவர்கள் கவனம் செலுத்திய விடயங்களை சமூகப் பரப்பிக்குள்
முதன்மைப்படுத்தி அடுத்தவர்களுக்கு நெருக்கடியேக் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?.

Read Full Post »

கருத்துரிமை

அன்பர்கள் கவனத்திற்கு! நாம் சிரமப்பட்டு செய்யும் ஆய்வுகளை, ஆக்கங்களை நொடிப் பொழுதில் பிரதி பண்ணி தங்களது சொந்த ஆய்வுகள் போண்றும் ஆக்கங்கள் போண்றும் சமூகத்தில் சிலர் வெளியிட்டு வருவதால் எமது இணையத்தில் வெளியிடப்படும் ஆக்கங்களை தங்களது எழுத்திலோ உரைகளிலோ பயன்படுத்த விரும்புபவர்கள் எமது இணையத்தையும் கருத்தாசிரியரையும் மேற்கோள் காட்டும் படி வினயமாய் வேண்டிக் கொள்கிறோம். தவறும் பட்சத்தில் இத்தகையவர்களை ச்மூகத்திற்கு அடையாளங் காட்ட வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்படும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்-
தாருல் அதர் இணையத்திலிருந்து…

இது வரை நாம் என்ன பேசியிருக்கிறோம் என்றால் ஒரு ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஒரு
எம்சிகிவ் பேப்பருக்கு பதில் சொல்லற மாதிரியாகத்தான் இருக்கிறது.
உண்மையும் தான் என்ன ?

01 .தொழுகையில் விரல் ஆட்டுவது….
02 . நெஞ்சில் தக்பீர் கட்டுவது…..
03 .ஒரு நாள் முந்தி நோன்பு நோற்பது …
04 .எட்டு ரக்அத் தராவீஹ் தொழுவது…….
05 . ஒரு நாள் முந்தி பெரு நாள் கொண்டாடுவது….

இந்த சீசன் இதல்லாம் பண்ணி முடிஞ்சா ….
அடுத்தது….
06 .ஏன் சேர்மாரக் கண்டா இல்லாட்டி அவர்கள் வகுப்புக்கு வரும் போது எழுந்து நிக்க வேண்டும்….
07 .உன் முகத்த விட பெரிசா தாடிய வளர்த்துக் கொள்….
இதில ஸ்கூலப் போட்டு ஒரு வாட்டு வாட்டி முடிச்சாச்சு….
08 .இரத்த தானம்- எல்லோர்ர ரத்தத்தையும் குடிக்கப் போறம் அதனால முன் கூட்டியே தாங்கிக் கொள்ள
முடியாதவங்க வாங்கிக் கொள்ளுங்க என்ற ரேன்ஞ்சில பிளட் டோனேசன்….
09 .சிரம தானம்- ஊருக்குல்ல புதுசா சில களைகளை எடுக்க வேண்டி இருக்கு என்பதைக் காட்டத்
தானா சிரம தானம் செய்தது,அட யாருக்குமே இந்த சிக்னல் விளங்காம போய்ட்டே…

08 .இலங்கையில் இருக்கிற இயக்கங்கள் கொஞ்சத்த தேடிக் கண்டு பிடிச்சு யாரு சத்தமாக
பேசுற எண்டு ஒரு பரீட்சார்த்த முயற்சி ….
இதில சிடி பிஸ்னஸ் எல்லாம் மேல் மட்ட சமாச்சாரம்.
இது வரை வேலை செய்து வந்த .கொண்டிருக்கும் எல்லாம் இயக்கத்தையும் திட்டி
பழி தீர்த்து விட்டாச்சு …
09 .திரும்ப சனிப் பெயர்ச்சி ஊர நோக்கி….
10 .மகா நாடு என்று முதன் முதலாக பொக்கட் மீட்டிங்குக்கு பேர் கண்டு பிடித்து
சீதனத்த ஒழிப்போம் என்று ஊர்ல புதுப் படம் என்ற பெயர்ல பழைய மசாலாவ அரைத்தது….
இந்த யாவாரம் நல்ல ஓடிட்டு இருக்கும் போதெ காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்
அல்லவா…
அடுத்த படத்திக்கு அவசரமாக போனபோது தான் சனிக்கே சனி புடித்தது…
11 .தங்க நகை அணிவது ஹராம் .
மிக நீண்ட காலமாகவே விவாதங்களைப் பார்த்து அலுத்து விட்டது .
இந்த சமூகத்திக்காக ஏதாவது செய்திருக்கிறார்களா என்ற பெரும் கேள்வி தான்
ஏளனத்துடன் தொக்கி நிக்கிறது .
இதில ஒரு விஷயத்தை எங்க சேர்க்கிறது என்று தெரியல்ல ஆனா பொதுவா சொன்னா
உங்கட மெம்பர்ஸ்ச விட நீங்க அடிச்ச நோட்டீஸ் நம்பர்ஸ் கூட என்பது தான்.
இத கொஞ்சம் நிறுத்திடாதீங்க கின்னஸ் என்று ஒரு சமாச்சாரம் இருக்கில்ல,
அதுல இந்த துறையில சாதனை படைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கு.

Read Full Post »

அஸ்ஸலாமு அலைக்கும்

ஒரு நல்ல நாளையில் எதுவெல்லாம் நடக்கக் கூடாதுன்னு நாம் நினைக்கிறோமோ…
அதெல்லாம் நடந்தாலும் அதுக்கு என்ன முடிவு செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோமோ
அதனைச் செய்பவர்களும் நாம் தான். நேற்று காலை கடற்கரையில் எமது ஊரின் அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடாகியிருந்த பெரு நாள் தொழுகையின் போது இடம்பெற்ற சில தகாத நிகழ்வுகளை உங்களுடன்
பகிர்ந்து கொள்கிறோம்.
பெரு நாள் தொழுகையே நடாத்துவதற்காக உலமா சபைத் தலைவர் ஏ.ஜி.எம்.கபூர் மதனி பி.ஏ நியமிக்கப்பட்டிருந்தார்.
தொழுகையே நடாத்துவற்காக மெளலவி அவர்கள் எழுந்து தக்பீர் கட்டுவற்கான ஒழுங்குகளை சொல்லிக் கொண்டிருக்கும் போது ஆட்டோ ஓட்டும் ரிஸ்வான் ( சத்தியமாக எங்களுக்குத் தெரியாதுங்க அது எந்த சர்வதேச பல்கலைக் கழகத்துல பட்டம் வாங்கினது என்று, கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடத்துவது நல்லமில்லை என்று நினைக்கிறோம் ? )மிக வேகமாக எழுந்து சென்று மெளலவியின் கையிலிருந்த மைக்கப் பிடித்து பறித்து தாம் இஸ்லாத்தை மிகச் சிறப்பாக பித்அத் என்று சொல்லும் ( என்ன கொடும மன
பித்அத் பற்றி யாருக்கு யார் சொல்ல வேண்டியிருக்கிறது…? ) யாவற்றையும் ஒழிக்கவே இந்த ஊரில் கஷ்டப்படுவதாகவும் என்று கூறத் தொடங்கவும் மற்றும் அடியாள் நிஜாம் ( இது சஊதியில் எப்படி வாழ்வாங்கு வாழ்ந்தார் என்று கதை கதையாய் எழுதலாம் ஆனால் எமது தளத்திக்கு அந்த சட்பிகேட் கொடுத்து விடுவீர்கள் என்ற பயத்தில் தவிர்ந்து கொள்கின்றோம் ) இந்த அறிவாளியுடன் கூடச் சேர்ந்து இஸ்லாம் பழசாகிட்டதோ என நினைத்து தூசு தட்ட முனைந்த போது பெரும் அமளி துமளியாகப் போய்விட்டது.
நல்ல காலம் யாரோ ஒரு புண்ணியவான் அடிங்கடா அவனை என்று சத்தம் போட ஒரு குரலுக்கு ஒன்றுபட்ட சமூகமாய் நம் மக்கள் அணி சேர்ந்து அவனுகளை அடித்து விரசத் தொடங்கியது.
இதற்கிடையில் பாதுகாப்புக்காக வந்திருந்த பொலிசும் சேர அவனுகள் ஓடியே போய் விட்டானுகள்.
தொலைந்தான் எதிரி,பிறகு தொழுகை சிறப்பாய் நடந்து முடிந்தது.
பல விஷயங்கள் இங்கு …
* உண்மையில் அடிப்பதற்கான எத்தகைய ஆயத்த நிலைமையும் அங்கு இருக்கவில்லை,
குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பொல்லொன்று இருந்தால் தானே நாலு சாத்து சாத்த முடியும்.
சுருக்கமாகச் சொன்னால் ஆயுதங்களே இல்லாத மக்கள் நிராயுதபாணியான நிலை.
* பாதுகாப்புக்கு வந்திருந்த பொலிஸ்.
அவசரத்தில என்ன பண்றோம் என்று தெரியாமல் ஏதாவது செய்ய நாளைக்கு வழக்கு என்று வந்தால்
பிறகு யாரு சீரழிவது.
அதனால இந்த முன்னைய பாடத்தை இந்த முறை அனுபவத்தில் கொண்டு உணர்ச்சியேயும் ஆவேசத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டமை.
* எதிர்பார்ப்பு தோற்றுப் போனமை.
முன்னுக்குப் போய் நாம் சத்தம் போட்டா நம்முட ஜமாஅத்காரன் எழும்பி வந்து விஜயகாந்த் பாணியில்
ஏதாவது புரட்சி வசனங்கள் பேசி காப்பாற்றுவார்கள் என்று நினைத்தது பொழப்பக் கெடுத்துப் போட்டு.
* தொழவைக்க வந்த மெளலவியே அவமதித்தது ஒரு அனுதாப அலையே அவர் மேல் ஏற்படுத்தியது.
அது என்ன மன நம்முட ஊர் தான் கிழக்கிலேயே சிந்தனை ரீதியாக வளர்ச்சியடைந்தது
என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் ஆனால் என்னமோ தமிழ் நாட்டு பட்டிக் கிராமங்களில்
நடப்பது போல எவனோ ஒருத்தன் சாராயத்தைக் குடித்து விட்டு அன்ராயர் தெரிய வேட்டிய மடிச்சிக்
கட்டி நின்று சத்தம் போட்டு அடக்குற மாதிரியில்ல வளர்ந்து வாரானுகள்.
மிக வினயமாக ஒரு விடயத்தை இங்கு நாங்கள் சம்மேளத்தினது கவனத்திக்கு கொண்டு வருகின்றோம்-
* பொது இடத்தில் ஒருவனுக்கு நாகரிகமாக நடக்கத் தெரியவில்லை எனில் அவன் கண்டிக்கப்பட
வேண்டியவன்
மிக ரகசியமாக இது முதல் தடவை எனில்,
இதனையே பொழப்பா கொண்டு ஒருத்தன் திரிகிறான் எனில் அவனுக்குரிய தீர்வு என்பது சமூகத் தண்டனையாகவே இருக்க வேண்டும்.
இதனை அமுல்படுத்துவது ஒன்றும் கஷ்டமில்லை , நாம் தான் தனிச் சமூகமாக வாழ்பவர்கள்.
எமக்குள் ஏற்படும் நடத்தைப் பிறழ்வுகளைத் தீர்க்க இதுவன்றி வேறு என்ன வழிமுறை இருக்க முடியும்.
* நிச்சயமாக உலமா சபை இந்த விஷயத்தில் அமுக்கத்தைக் கொடுக்க வேண்டும்.
ஒரு உலமாவுக்கு ஏற்படும் அவமானத்தை எப்படி இந்த சமூகம் தடுக்கப் போகின்றது?
இங்கு மக்களின் எதிர்வினை மிகவும் மகிழ்வைக் கொடுக்கின்றது.
ஆனால் எதிர் காலத்தில் இது போன்ற அநாகரிகமான நிகழ்வுகள் இடம் பெறாதிருக்க இப்போது எடுக்கப்
போகும் தீர்வுகள் தான் அடித்தளமாக அமையப் போகின்றன என்பதனைக் கவனத்திற்
கொள்ள வேண்டி இருக்கின்றது.
சமூகக் கட்டுப்பாடுகள் தான் ஒரு சமூகத்தை மிகச் சரியாக வழி நடத்திச் செல்லும் தன்மை கொண்டது.அதற்காக அதிகாரங்களை நாம் முன் மொழியவில்லை.
எமது ஊருக்கு அல்ஹம்துலில்லாஹ் சம்மேளனமே போதுமானது.
சற்று ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பதனையே அழுத்தமாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

Read Full Post »

Older Posts »